இங்ஙனம் அமைந்துள்ள புலவர் பெயர்களைக்கொண்டு ஆராய்ந்தால் எட்டுத் தொகையில் முதலில் தொகுக்கப்பட்ட நூல் குறுந்தொகையென்பது தெரியவரும். காக்கை பாடினியார் நச்செள்ளையாரென்பது ஒரு புலவர் பெயர். அவருடைய இயற்பெயர் நச்செள்ளையாரென்பது. விருந்துவரக் கரைந்த காக்கையைப் பாராட்டினமையின் காக்கைப்பாடினியாரென்ற சிறப்புப் பெயர் அவருக்கு உளதாயிற்று. குறுந்தொகையை முதலில் தொகுக்கையில் நச்செள்ளையார், காக்கை பாடினியார் நச்செள்ளையாரெனக் குறிக்கப்பட்டார். அப்பால் தொகுக்கப்பட்ட நூல்களில் அவ் வாறே வழங்கப்பட்டார். கயமனாரென்பது ஒரு புலவர் பெயர். அப்பெயரை அவரது சிறப்புப் பெயராகவே கருத இடமுண்டு; அவரது இயற்பெயர் தெரியவில்லை. குறுந்தொகையில், கழியில் உள்ள நெய்தல் மலருக்குக் கயத்தில் மூழ்கும் மகளிர் கண்ணை அவர் உவமிக்கின்றனர். கயத்தில் நிகழும் நிகழ்ச்சியைக் கூறுதலின் அப் பெயர் பெற்றாரென்று கொள்ளல் தகும். அவர் இயற்றிய பாடல்கள் பிறதொகை நூல்களிலும் காணப்படுகின்றன. அவ்விடங்களிலும் கயமனாரென்ற சிறப்புப் பெயரேகுறிக்கப் பெற்றிருக்கிறது. அவருடைய இயற்பெயர் தெரிந்த காலத்தும் குறுந்தொகையிலமைத்த பெயரையே பின்தொகுத்த நூல்களிலும் அமைத்தனரென்றே தெரியவருகின்றது.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “குறுந்தொகை”