‘திருவள்ளுவ நாயனார் திருவாய்மலர்ந்தருளிய திருக்குறள் மூலமும் உரையும்’என்னும் தலைப்பிட்ட இந்நூல் முதன்முதலில் 1961ஆம் ஆண்டில் டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூலகத்தினரால் வெளியிடப் பெற்றது. ஏறத்தாழ 63 ஆண்டுகட்குப்பின் இரண்டாவது பதிப்பு 2023ஆம் ஆண்டு வெளியிடப் பெறுகின்றது. இடையே நூற்றுக்கணக்கான பதிப்புகள் வெளிவந்திருக்கக் கூடும். இந்தப் பழைய உரையினைப் பாதுகாத்து எழுதித்தந்தவர் கொண்டப்ப வாத்தியார் என்பவர் ஆவர்.
உரையாசிரியர் இன்னார் என்பது புலப்படவில்லை. இவ்வுரை பெரும்பாலும் பரிமேலழகர் உரையினைத் தழுவி எழுதப்பட்டது. பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார் இவ்வுரை நூலிற்கு எழுதிய முகவுரை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. பதினேழு அல்லது பதினெட்டாம் நூற்றாண்டில் இவ்வுரை எழுதப் பெற்றிருக்கக் கூடும் என்பார் அறிஞர் மு.வ.
இப்பதிப்பில் வரும் சில பாடவேறுபாடுகள் ஆராய்ச்சிக்கு உரியனவாக விளங்குகின்றன. தொடர் அமைப்புகள், மேற்கோள் முதலியனவற்றில் பிழைகள் உள்ளன என்பதையும் மு. வரதராசனார் குறிப்பிடுகின்றார். மூலச்சுவடியின் இறுதியில் ‘கொண்டப்ப வாத்தியார் எழுதின திருவள்ளுவருரை’ எனக் குறிப்பிடப் பெறுவதும், இதற்கு வேறொரு தாள் சுவடி இருப்பதும் முதல் பதிப்புரையால் அறியமுடிகின்றது.
திருக்குறளின் முதல் பதிப்பு 1812ஆம் ஆண்டில்தான் வெளியிடப்பெற்றது. அம்பலவாணத் தம்பிரான், ஞானப்பிறகாசர் ஆகியோர் சென்னை மாசத தினச் சரிதை அச்சுக் கூடத்தின் மூலமாக அச்சிட்டனர். நாலடியாரும், திருவள்ளுவ மாலையும் இந்நூலில் உள்ளன.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “திருக்குறள்”