இது கடவுள்வாழ்த்துச் செய்யுள்முதலிய 400-அகவற்பாக்களையுடையது. அப்பாக்களுள் முதற்செய்யுளாகிய கடவுள் வாழ்த்துப் பாரதம்பாடியபெருந்தேவனாராலும் மற்றை 399-பாக்களும் முரஞ்சியூர் முடிநாகராயர்முதல் கோவூர்கிழாரிறுதியாகவுள்ள புலவர் பலராலும் இயற்றப்பட்டுள்ளன. இதனைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் இன்னாரின்னாரென்று விளங்கவில்லை. இந்நூலிலுள்ள பாக்களினுடைய அடிகளின் சிறுமைபெருமையும் தெரியவில்லை. இது புறப்பாட்டெனவும் புறமெனவும் வழங்கும். இது பொருளாற்றொகுக்கப்பட்டது. இங்கே பொருளென்றது, அகம் புறமென்னுமிரண்டனுள் புறத்தை.
புறத்தின்பகுதியாகிய வெட்சிமுதலிய திணைகளுக்குரிய துறைப்பொருளமைந்த 400-பாக்களையுடைமையின், புறநானூறென்று பெயர்பெற்றது. வெட்சிமுதலிய திணைகளாவன:– வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணையென்பன. திணை-ஒழுக்கம். துறை-மக்களும் விலங்குகள் முத-யனவும்சென்று நீருண்ணும் துறைபோலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதற்குரியவழி.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “புறநானூறு”