தமிழ்த் தாத்தா பிறவா யாக்கைப் பெரியோனாகிய அம்மையப்பன்பால் பேரன்பு கொண்டவர். அவ்விறைவன் மீது சிற்றிலக்கியங்களைப் பாடியவர். அவர் தேவாரப் பதிகங்களைச் செம்மையாகப் பதிப்பிக்கும்பேருள்ளம் கொண்டவர். அதற்கென அவரால் தொகுத்து வைக்கப்பெற்ற குறிப்புக்களைக் கொண்டு, இந்நூல்நிலையத்தின் மேனாள் காப்பாட்சியர் வித்துவான் சு.பால சாரநாதன் அவர்களும் புலமையாளர் எஸ்.சாயிராமன் அவர்களும் ‘திருத்தலங்கள் வரலாறு’ எனும் இந்நூலை உருவாக்கினர். இந்நூல் ஆறாம் பதிப்பாக இப்பொழுது வெளிவருகிறது.
சைவத் திருத்தலங்கள், அவற்றின் அமைவிடங்கள், அங்கு அருள்புரியும் சுவாமியின் பெயர், அம்மையின் பெயர், தீர்த்தங்கள், தலமரம் (விருட்சம்) ஆகிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. திருத்தலங்கள், சுவாமி, அம்மை ஆகியோரின் அருட்செயல்களை விவரிக்கும் புராணச் செய்திகள் போல்வன சுருங்கச் சொல்லி விளங்க வைக்கப்பெற்றுள்ளன. இங்குக் குறிக்கப்பெற்றுள்ள புராணக் கதைகள் பல்வேறு நூல்களில் இடம்பெற்றவை. பல்வேறு இடங்களிலுள்ள மணமும் சுவையும் கொண்ட பூக்களிலிருந்து உறிஞ்சப்பெற்ற நறுந்தேனைத் தேனீக்கள் ஒரு கூட்டில் தொகுத்துத் தருகின்ற பணியைப் போன்றது இந்நூலினை ஆக்கியோரின் திருப்பணி. தேவாரம், திருவாசகம் போன்ற சைவநூல்கள், திருத்தலங்கள், இறைவனின் பெருமைகளை அறிவிக்கும் இந்நூல் ஆய்வாளர்களுக்கும் இறையன்பர்களுக்கும் பெரிதும் பயன்தரும் என்பது திடநம்பிக்கை.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “திருத்தலங்கள் வரலாறு”