இறவாத புகழுடைய புதுநூல் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் சரித்திரம் என்றால் மிகையாகாது. ஒரு புலவரது வரலாறு எவ்வாறு அமைய வேண்டுமோ அவ்வாறு அமைவதற்கு இலக்கணமாக அமைந்த வரலாறு ஆகும். இதைப் பிள்ளை அவர்கள் சரித்திரம் என்று சொல்வதைவிட ஒரு நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கிய வரலாறு என்று கூடச் சொல்லிவிடலாம்.
அவரது தணியாத தமிழ்ப் புலவர் வரலாறு என்னும் தாகத்தைத் தணிக்க வந்த கோடை மழை அவரது ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம் ஆகும். நேரில் பழகிப் பாடங்கேட்டும் பிறர்பால் அறிந்தும் நூல்களை ஆராய்ந்தும் பிள்ளையவர்களைப் பற்றி வரலாற்று முறைப்படித் தொகுத்து எழுதிய இச்சரித்திர நூல் இக்கவிஞர் பெருமானைப்பற்றிப் பலரும் நன்கு அறிந்து கொள்ளத் தக்கதாக வரலாற்று நூல்களின் தமையாக விளங்குகிறது.
கிட்டதட்ட ஒரு நூற்றாண்டு காலம் தமிழகத்தில் தமிழின் நிலை, வாழ்ந்த தமிழ்ப்புலவர் பற்றிய குறிப்புகள், அப்பொழுது தோன்றிய தமிழ் நூல்கள் என்று ஒரு வரலாற்றுக் களஞ்சியமாக இச்சரித்திரத்தை உருவாக்கி உள்ளார்கள்.
ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் அவர்கள் திரு அவதாரம் முதல் அவர்களது மறைவு வரை உள்ள சரித்திரத்தை அவர்கள் எழுதிய நூல்கள், பாடல் சொல்லிய அனுபவங்கள், பழகிய இடங்கள், உடன் பழகிய புலவர் பெருமக்கள், அவர்களைப் போற்றியவர்கள், அவர்களால் போற்றப்பெற்றவர்கள். ஆசிரிய மாணவர் அன்பின் திறம், அக்காலத்திய செந்தமிழ்ப் பண்ணையாக விளங்கிய திருவாவடதுறை ஆதீனத்தின் தமிழ்ப்பணி என்ற ஒவ்வொன்றையும் ஆசிரியர் சொல்லிச் சொல்லி நம் நெஞ்சில் பதியவைக்கும் அழகு படிப்போர் நெஞ்சில் நீங்காது நிற்கும்.
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
Be the first to review “ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்”